சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மனித உயிரிழப்புகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற சாதனை இந்தியாவுக்கு வேண்டாம் என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.
உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாலோ என்னவோ இந்தியாவில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய மதிப்பிருப்பதில்லை. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதுதான் மிகவும் வேதனையானது.
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் சீன அரசு மேற்கொண்ட கடும் முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெருமளவு குறைந்து உள்ளது.
சாலை விபத்துகளைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளில் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளில் 10 சத அளவு இந்தியாவில் ஏற்படுகிறது. இங்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உலகில் உள்ள மொத்த வாகனங்களில் 1 சதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சாலையில் பயணிக்கும் 1000 வாகனங்களில் 35 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், உலக சராசரியாக 1000- க்கு 4 முதல் 10 வாகனங்கள் மட்டுமே விபத்தில் சிக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோராண்டும் சாலை விபத்துகளில் சிக்கி சுமார் 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் சீனா மற்றும் அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் 10 சத அளவு குறைந்து வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் 52 சத வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சாலை விபத்துகள் குறைந்து வருவதற்கு அந்த நாட்டில் உள்ள தரமான சாலைகளே முக்கிய காரணம். கடந்த 1930-ம் ஆண்டிலேயே அறிவியல் ரீதியான சாலைகளை இந்த நாடுகள் அமைத்துள்ளன என்று ஐநாவின் சாலைப் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது.
சாலைவிபத்துகளில் உயிரிழப்பவர்களின் 70 சதம் பேரின் குடும்பங்கள் வருமானத்திற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றன. விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைச் சீரழித்துவிடுகின்றன. அதிகரித்துவரும் விபத்துகளைக் குறைக்கவும் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து நமது உயிரையும் சாலையில் பயணிக்கும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கும் இல்லை.
இந்த நிலை மாற வேண்டுமெனில், அரசும், அரசு அதிகாரிகளும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து உண்மையான அக்கறையோடு செயல்படத் தொடங்க வேண்டும். அரசு சாலைப் பாதுகாப்பிற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் நெறிப்படுத்தி சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் சுயநல எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அரசு இயற்றும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் எந்தத் தொய்வும் இன்றி அமல்படுத்த வேண்டும்.
மக்களும் சாலைப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பங்கினை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை முழுமையாக உணர்ந்து போதிய கவனம் செலுத்தி தங்கள் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டிய சீனாவைப் போன்று இந்திய அரசும் சாலை விபத்துகளைக் குறைக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் உலகிலேயே முதலிடம் என்ற சாதனை நமக்கு வேண்டாம். இதனை இந்தியர்கள் என்ற முறையில் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.
No comments:
Post a Comment