Wednesday, May 19, 2010
அரசு ஒதுக்கீட்டு சுயநிதி எம்.பி.பி.எஸ். கட்டணம் எவ்வளவு?
சென்னை, மே 18: தமிழக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தொடர்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதம் அளிக்கப்படும். இந்த இடங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு? கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரி என நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கடந்த ஆண்டு 283 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன.
மதுராந்தகம் அருகே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ கற்பகாம்பிகை மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 இடங்கள் கிடைத்தன; இந்த ஆண்டு இந்தக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இந்த மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டும் மாணவர்களைச் சேர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்து விடும் நிலையில், அரசு ஒதுக்கீட்டுக்கு மீண்டும் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து விடும்.
எனினும் இந்த ஆண்டு சென்னை வண்டலூர் மற்றும் சென்னை திருவேற்காட்டில் புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்பதால், அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் மொத்த எண்ணிக்கை 348-லிருந்து 542-ஆக அதிகரிக்கும்.
கட்டணம் எவ்வளவு? சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டண விவரம்: 1. ஈரோடு பெருந்துறை ஐ.ஆர்.டி.--ரூ.1.30 லட்சம்; கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை--ரூ.2.30 லட்சம்;
கோவை பி.எஸ்.ஜி.--ரூ.2.25 லட்சம்; மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி--ரூ.2.5 லட்சம்.
நீதிபதி குழு கடந்த ஆண்டு நிர்ணயித்த இந்தக் கட்டணம், நடப்புக் கல்வி ஆண்டுக்கும் (2010-11) தொடரும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ள இரண்டு புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
சுயநிதி கட்-ஆஃப் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கவுன்சலிங் நடத்தப்படும் போதே, கடந்த ஆண்டைப் போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் அதே தினத்தன்று கவுன்சலிங் நடத்தப்படும். சுயநிதி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் மாணவர்கள், முன் தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கு டி.டி. செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு (2009-10) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு வகுப்பு வாரியாக கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: பொதுப் பிரிவினர் (ஓ.சி.)-194.75; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-194; பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்)-193; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-190.75; தாழ்த்தப்பட்ட வகுப்பினர்-184; தாழ்த்தப்பட்ட வகுப்பு (அருந்ததியர்)-174.75; பழங்குடி வகுப்பினர்-163.25.
சுயநிதி பி.டி.எஸ். கட்டணம் எவ்வளவு? சென்னை பாரிமுனையில் மட்டும்தான் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ். கட்டணம்-ரூ.8,495. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 900 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கான கட்டணம் கடந்த ஆண்டு ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.82,000-மாக அதிகரிக்கப்பட்டது. அதே ரூ.82,000 கட்டணம் இந்த ஆண்டும் தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment