வேகப்பந்து வீச்சாளரின் பந்தை முட்டி போட்டுக்கொண்டு விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே அடிக்க முடியும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் அவரைப் பைத்தியம் என்று சொல்லியிருப்பார்கள். உடலிலும் உள்ளத்திலும் மின்னல் வேகத்தில் இயங்க வேண்டும் என்பதால் டி-20 இளைஞர்களுக்கான ஆட்டமானது.
சூழலுக்கு ஏற்ப துரிதமாக மாறிக்கொண்டே இருப்பது பச்சோத்தனமன்று. புதியவற்றை உள்வாங்கும் தற்காப்பு நிலைதான். இந்தநிலைதான் கிரிக்கெட்டின் இன்றைய புதிய முகம். நான் இப்படித்தான் ஆடுவேன் என்று சொன்னால் இதோ உன் வீட்டுக்குப் போகும் வழி என்று அனுப்பி விடுவார்கள். ஆனால், இன்னமும் நமக்கு நினைவில் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சச்சினின் சதங்கள், கபில்தேவின் சாதனைகள்தான்.
ஆனால், இவையெல்லாம் இப்போது கதைக்கு உதவாது. பழங்கதை பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.
பணத்தின் பின்னால் ஓடுகிறது உலகம். அதில் விளையாட்டு வீரர்கள் மாத்திரம் என்ன விதிவிலக்கா? தங்கள் தேசத்து அணிகளுக்காக விளையாடும்போது அதிக சம்பளம் கிடைக்காத நிலையில், ஐ.பி.எல்.க்காக விளையாடும்போது கிடைக்கிறதே? பிறகு என்ன தேசம் பற்றிய நினைப்பு வரவா போய்கிறது?
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடுவதில் கிடைப்பதைவிட அதிக பணம் ஐ.பி.எல்.லில் ஆறுவாரம் விளையாடுவதில் கிடைத்துவிடுகிறதே?
தமிழ் இலக்கியங்களில் பக்கங்கள் நிறைந்த, பாத்திரப் படைப்புகள் மிகுந்த இதிகாசங்களை, காப்பியங்களை படிக்கும் நிலை மாறி புதினங்கள், பாக்கெட் நாவல், சிறுகதை, ஒருபக்கக் கதை என்ற நிலை மாறியதே? ஏன்? ரசிகர்களின் விருப்பங்களைப் பொருத்தே. இலக்கியமும் தன் வடிவங்களை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால் அவசர உலகத்தில் உடனடியாகப் படித்துவிட்டுப் போகும் மனோபாவம் தொற்றிக்கொண்டுவிட்டது.
அதைப்போலத்தான் 5 நாள்கள் ஆடப்பட்ட கிரிக்கெட் சோர்வு தந்ததால், 50 ஓவர் அதாவது ஒருநாள் ஆட்டமானது. பின்பு ஒருநாள் ஆட்டமும் சுருங்கி 3 மணி நேரத்தில் முடியும் டி-20 ஓவர் ஆட்டமாகியிருக்கிறது.
இந்தக் குறுகிய கால ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் சொக்கிப் போய் நிற்கிறார்கள் இந்தியாவின் புகழ் வாய்ந்த ஆட்டமான ஹாக்கி பின்னுக்குப் போகாமல் பிறகு என்ன செய்யும்?
இங்கிலாந்து அணியில் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர் சொன்னார் - இன்னும் ஐந்து ஆண்டுகளில் கிரிக்கெட்டின் முகம் மாறிவிடும் என்று. மிகப்பெரிய கண்டுபிடிப்பான டி-20 கிரிக்கெட்டின் மாபெரும் வளர்ச்சி அல்லது பணவியாபாரத்தின் வாசல்களைத் திறந்துவிட்டதற்கான சாவியா என திகைக்க வைக்கிறது.
இங்கிலாந்தில் 2003-ல் டி-20 தொடங்கியபோது கிரிக்கெட் வீரர்கள் அதை ஒரு கேளிக்கையாகத்தான் அதுவும் ஏதோ வேலைகளுக்கு நடுவில் ஒரு புத்துணர்வுக்கான ஆட்டம் என்றுதான் நினைத்தார்கள். பிள்ளையார் பிடிக்கப் போக குரங்கான கதைபோல, விசுவரூபம் எடுத்து நிற்கும் டி-20 ஆட்டத்தைக் கண்டு விளையாட்டு வீரர்கள் உள்பட அனைவரும் ஆடிப்போய்த்தான் இருக்கிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமானபோது ஏற்பட்ட அதே எதிர்ப்பு, இப்போது டி-20-க்கு ஐ.சி.சி. கூட்டத்தில் எதிராக வாக்களித்த ஒரே நாடு இந்தியாதான். ஐ.பி.எல். என்பது விளையாட்டும், வியாபாரமும் கலந்து கலவையாக இன்று நம் கண்முன் கண்ணாமூச்சி ஆடுகிறதே!
அனுபவ வீரர்களை அழைக்காமல் இளம்வீரர்களை அனுப்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதே இதன் வெற்றிக்கு முதல் காரணம். கடைசி பத்து ஓவர்கள் களமிறங்குபவர்களுக்கு கடுமையான நெருக்கடியைத் தந்தது முந்தைய ஆட்டம். ஆனால், டி-20 போட்டிகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. மட்டை வீச்சும், பந்துவீச்சும் சூடு பறக்க வேண்டும். தமது ஆற்றலை வெளிப்படுத்தியே தீர வேண்டும். இல்லையேல் அம்போதான்.
இந்த இமாலயச் சாதனை இருபது வயது இளைஞர்களால்தான் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவுக்கு இளைஞர்கள் வழிகாட்டுகிறார்கள் என்கிற தீர்க்கதரிசன பார்வையைக் கற்றுத் தருகிறது. உலகக் கோப்பைத் தோல்வியின் போது டோனியின் வீட்டுச்சுவரை இடித்த ரசிகர்கள், அவரை 30 கி.மீ. தூரம் தூக்கிச் சுமந்ததற்கு இந்த ஆட்டமே காரணகர்த்தாவாகத் திகழ்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த டிராவிட் எந்த அவகாசமும் தராமல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்திய அணியை மோசமான ஒரு பின்னடைவிலிருந்து கரைசேர்த்த பெருமை டிராவிட்டை சேரும். இந்த இடைவெளியில்தான் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ்ந்தது எனலாம்.
அதாவது விக்கெட் கீப்பராக இருந்த மகேந்திரசிங் தோனி ஆஸ்திரேலியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பின்புலம் இல்லாத, அடித்தளங்கள் அற்ற தோனி, ஒரு மாயஜாலத்தை ஏற்படுத்தினார். தோற்கடிக்கப்படாத ஒரு பிம்பமாகத் திகழ்ந்தார். இந்தியாவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பகுதிகளுக்கும் கிரிக்கெட் பரவியிருக்கிறது என்பதற்கு தோனியின் வளர்ச்சி ஒரு நல்ல முன்னுதாரணமாகும். ஒரு பம்ப் ஆபரேட்டரின் மகனான தோனியின் வளர்ச்சி மக்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கிறது. 1962-ம் ஆண்டில் மன்சூர் அலிகான் பட்டோடிக்கு ஏற்பட்ட வளர்ச்சி வேகத்தை இதனோடு ஒப்பிடலாம்.
இந்தியாவில் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும், பட்டிதொட்டிவரை ஐந்து வயது சிறுவன் முதல் அறுபது வயது பெரியவர்வரை எல்லோர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்ற ஒரே விளையாட்டு கிரிக்கெட்தான். கிரிக்கெட் பிடிக்காதவர் இருக்கலாம். கிரிக்கெட்டால் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியர்களை இணைக்கும் தேசிய நீரோட்டத்தின் சின்னமாக கிரிக்கெட் திகழ்வதை மறுதலிக்க முடியாது.
இந்த இடத்தில்தான் வருத்தம் நமக்கு மேலோங்குகிறது. தேச ஒற்றுமையைப் பறைசாற்றும் கிரிக்கெட்டின் முகமும், வடிவமும் மாறி, தேசத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்வதை மழுங்கடித்து, மாறாக பணம் காய்ச்சி மரமாக மாறி இருக்கிறதே என்று சொல்கிறபோது நிச்சயம் கண்ணீர் வராமல் இல்லை.
சென்னை அணி, பஞ்சாப் அணி என்று ஏதோ கிளப்களுக்கு ஒரு அணிக்கு விளையாடுவவதில் கிடைக்கும் முக்கியத்துவம், நம் தேசத்துக்காக ஆடும்போது தரப்படவில்லையே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது.
டி-20 என்பது சுருக்கமான கூர்மையான, பணம் புரளும் அணு கதிர் இயக்கத்தைப்போல இருப்பது பெரும் ஆபத்தல்லவா? ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சட்டவிரோத பணபரிமாற்றம், எந்த அணி வெற்றி பெறும் என்கிற மாயத்தோற்ற பரமபத விளையாட்டின் மூலம் கிரிக்கெட் தலைகுனிய வேண்டிய தருணம் இது. ஏனென்றால், விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், தந்திரம், அதிகார போதை, பணம் கறக்கும் காமதேனு என்று மேட்டுக்குடி மக்களின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மீண்டும் ஒரு காலனியாதிக்கத்தையே நினைவூட்டவில்லையா?
புனே, கொச்சி ஆகிய இரு அணிகள் மொத்தம் ரூ. 3,235 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இது இப்போது எட்டு அணிகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒட்டுமொத்தமாகப் பேசப்பட்ட ரூ. 2,853 கோடி ரூபாய்களைவிட அதிகம். சுருங்கச்சொன்னால் 2008 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முகேஷ் அம்பானி கொடுத்ததைவிட ஏழுமடங்கு அதிகம். ஐ.பி.எல்.லின் கமிஷனராக 46 வயது லலித் மோடியின் மாயஜாலம்தான் இத்தனை கூத்துகளும்.
அடிமை வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னால் அது தவறு. ஐ.பி.எல். என்னும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அந்த அடிமை வியாபாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. விளையாட்டு தேக ஆரோக்கியத்துக்கு என்று தொடங்கி, பின்னர் பரிசு என்று ஆரம்பித்து, பணம் காய்க்கும் மரம் என்றாகி, இப்போதும் பெறும் சூதாட்டத்தில் முடிந்திருக்கிறது. இந்த எழுச்சி கிரிக்கெட் அல்லது விளையாட்டின் எழுச்சியா? அல்லது பணக்காரர்களின் பண எழுச்சியா என்கிற சர்ச்சை எழாமல் இல்லை.
இல்லை என்றால் கப்பல் உடைக்கும் தொழில் அதிபர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும், அதிக வேலையே இல்லாத நடிகைகளுக்கும் கிரிக்கெட்டில் என்ன வேலை இருக்கிறது?
கிரிக்கெட்டின்மீது தீராத பற்றும் மாறாத பித்தும் பிடித்தவர்களா? இவர்கள். அதுவும் இல்லை. வர்த்தக பேரத்துக்குத்தானே ஒழிய விளையாட்டின் மீதான ஆர்வம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
கொச்சி அணி வாங்கியதில் எழுந்த சர்ச்சையில் பிரதமர் மன்மோகன் சிங், பராக் ஒபாமா சந்திப்பைக்கூட பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் சசிதரூர். விலைவாசி உயர்வுப் பிரச்னையைவிட சசிதரூர் பிரச்னை எழுப்பிய அதிர்ச்சி அலை மிகப்பெரியது.
ஒரு தேசத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட கிரிக்கெட், சில பணக்காரர்களின் குடையின்கீழ் இளைப்பாறுவதை எந்த இந்தியனும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது?
No comments:
Post a Comment