Tuesday, May 25, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்




திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது.

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது.

இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர்.

இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன.

டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர்.

ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.

இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.

இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது.

டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும்.

காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை.

ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர்.

விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator