Friday, May 28, 2010

மருத்துவ படிப்பிற்க்கு (MBBS/BDS) விண்ணப்பம் வினியோகிக்கபடுகின்றது



மருத்துவ படிப்பிற்க்கு (MBBS/BDS) விண்ணப்பம் வினியோகிக்கபடுகின்றது
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, May 17, 2010, 15:58
உயர் கல்வி
இந்த ஆண்டு MBBS, BDS படிப்பின் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் (மே 17) வினியோகிக்கப்படுகின்றது.

விண்ணப்ப படிவம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்திலும், மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கிடைக்கும். விண்ணபத்தின் விலை ரூ.500. பூர்தி செய்த விண்ணப்பங்களை கீழ்கானும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

THE SECRETARY, SELECTION COMMITTEE, 162, E.V.R. PERIYAR SALAI, KILPAUK, CHENNAI – 600 010.

பூர்தி செய்த (தபால் மூலம்) விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி மே 27, நேரடியாக விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி மே 31 .ஜூன் 11 தேதி ரேங்பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 21 தேதி கவுன்சிலிங் மூலம் சேர்க்கை நடைபெறும். (இன்ஷா அல்லாஹ்).

MBBS படிக்க கட்டண விபரம்

அரசு கல்லூரியில் ஆண்டு கட்டணம் : ரூ.10,495

தனியார் கல்லூரியில் ஆண்டு கட்டணம் : ரூ.1,30,00 முதல் 2,50,000 வரை

BDS படிக்க கட்டண விபரம்

அரசு கல்லூரியில் ஆண்டு கட்டணம் : ரூ.8,495

தனியார் கல்லூரியில் ஆண்டு கட்டணம் : ரூ.82,000

இந்த ஆண்டு விழுப்புரம், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அரசு மருத்துவ கல்லூரியும், இரண்டு தனியார் மருத்துவகலூரியையும் சேர்ந்து MBBS -க்கான சேர்க்கை 17 அரசு மருத்துவ கல்லூரிக்களுக்கும், 7 தனியார் மருத்துவ கல்லூரிக்களுக்கும் நடபெறுகின்றது.

BDS -க்கான சேர்க்கை 1 அரசு பல் மருத்துவ கல்லூரிக்கும், 15 தனியார் பல்மருத்துவ கல்லூரிக்களுக்கும் நடபெறுகின்றது.

முஸ்லீம்களுக்கு இந்த ஆண்டு 4 புதிய மருத்துவ கல்லூரிகள் சேர்ந்து இருப்பதால் முஸ்லீம்களுக்கு 70-க்கு மேல் MBBS இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 3.5% இட ஒதுக்கீடு உள்ள முஸ்லீம் மாணவ, மாணவியர் MBBS-ல் சேர கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு 194 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ( ஓர் இரு மதிப்பெண் கூடுதல், குறைய இருக்கலாம்).

மேலும் விபரங்களுக்கு www.tnhealth.org

Wednesday, May 26, 2010

எஸ்எஸ்எல்சி நெல்லை மாணவி ஜாஸ்மின்முதலிடம்




பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர். 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா ( வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), , நிவேதா ( பாத்திமா மேல்நிலைப்பள்ளி கூடலூர்), பிரியங்கா ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு), தமிழரசன் ( நேஷனல் மேல்நிலைப்பள்ளி அபிஷேகபாக்கம் புதுச்சேரி ), ஆகிய 4 பேர் 2 வது இடத்தை பிடித்துள்ளனர்.



3 வது இடத்தை பிடித்த 10 பேர் : 493 மார்க்குகள் பெற்று 10 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இதிலும் 7 மாணவிகள் தங்களது 3 வது இடத்தை பிடித்தனர். ரம்பயா (ஏ.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி புளியங்குடி தென்காசி ), ‌‌ஜெயலினி (சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டை ), திலகவதி (ஏ.வி., மேல்நிலைப்பள்ளி பரமக்குடி), பிரதீப்குமரார் (சவுராஷ்ட்டிரா மேல்நிலைப்பள்ளி பரமக்குடி ), ஜெயமுருகன்(நாடார் மேல்நிலைப்பள்ளி சவுத்கேட் மதுரை ), நாகராஜன் (செயிண்ட்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மதுரை) , இந்துஜா (லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி அனியாபுரம் நாமக்கல்), ராஜ்சூர்யா ( சேரன் மேல்நிலைப்பள்ளி , புன்னம்சத்திரம், கரூர் ), ரேவதி (விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி) , நசுரின்பாத்திமா (செயிண்ட் ஜோசப் மேல்நி‌லைப்பள்ளி ஆரணி, செயயாறு ), ஆகிய 10 பேர் 3 வது இடத்தை பிடித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதமும் மாணவிகள் 85. 5 சதமும் ‌தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 2 ஆயிரத்து 399 பேர் ஆவர் .


இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி :

முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.

ஐ.டி.பி வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ஐ.டி.பி வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சவூதி அரேபியாவின் ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தன்னலமற்ற சேவை நிறுவனம் ஐ.டி.பி (Islamic Development Bank) என்றழைக்கப்படும் இஸ்லாமிய முன்னேற்ற வங்கி.இவ்வங்கி ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் கல்வி பயிலும் நன்றாக படிக்கக்கூடிய அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் வழங்கி வருகிறது.

ஐ.டி.பி யின் சேவையை பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஐ.டி.பியின் முகவராக செயல்படுவது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு சார நிறுவனமான எஸ்.ஐ.டி என்றழைக்கப்படும் Students Islamic Trust ஆகும்.வழக்கம்போல் ஐ.டி.பி இவ்வாண்டும் அதாவது 2010-11 கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், ஹோமியோபதி, யூனானி, ஆயுர்வேதம், விவசாயம், மீன்வளம், காட்டு இலாகா, உணவு தொழில்நுட்பம், மைக்ரோ பயோலஜி, பயோடெக்னாலஜி, தொழில் நிர்வாகத்திற்கான பட்டப் படிப்பு,சட்டம் ஆகிய படிப்புகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உதவித் தொகையுடனான வட்டியில்லா கல்விக்கடன் வழங்கவிருக்கிறது.

இதற்கு அடிப்படைத் தகுதி முஸ்லிமான மாணவ மாணவிகள் மெட்ரிகுலேஷன் அல்லது செகண்டரி ஸ்கூலில்(+2) 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.நன்றாக படிக்கக்கூடிய அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிலுள்ள மாணவராக இருக்க வேண்டும். மாணவர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 250 ஆகும். இவர்களுக்கு டியூசன் கட்டணம், மருத்துவக் கட்டணம், ஆடைகள் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுக்கான தொகை வழங்கப்படும்.

மெடிக்கல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 45 ஆயிரமும், பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரம் ரூபாயும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.இத்தொகையை அவர்கள் படிப்பு முடிந்த பின்னர் எளிதான தவணை முறைகளில் திருப்பிக் கட்டவேண்டும். இது முற்றிலும் வட்டியில்லா கடனாகும்.
ஐ.டி.பி உதவித்தொகை மற்றும் வட்டியில்லா கடன் தொகை மூலம் இதுவரை 1163 மாணவர்கள் படிப்பை முடித்துள்ளனர். தற்பொழுது 645 மாணவர்கள் படிப்பைத் தொடருகின்றனர். ஐ.டி.பி இவ்வுதவித் தொகையை வழங்க ஆரம்பித்தது 1983 ஆம் ஆண்டிலிருந்தாகும்.

இவ்வாண்டு விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் ஆகஸ்ட் 25 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து தர இறக்கம் (Download)செய்யலாம் http://www.sit-india.org/scholarship.html அல்லது கீழ்க்கண்ட அலுவலகத்திலிருந்தும் விண்ணப்பத்தை பெறலாம்.

முகவரி

Mohammad Saifullah Rizwan
Executive Secretary
The Student Islamic Trust
Abul Fazal Enclave,
Jamia Nagar
New Delhi-110025
Contact: 91-9990630127, 91-11-26941028

Tuesday, May 25, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்




திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது.

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது.

இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர்.

இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன.

டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர்.

ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.

இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.

இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது.

டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும்.

காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை.

ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர்.

விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Friday, May 21, 2010

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!



பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.

மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.

வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.

பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து "உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்" என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.

இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-
"ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்"

நன்றி : தினத்தந்தி

Wednesday, May 19, 2010

அரசு ஒதுக்கீட்டு சுயநிதி ​எம்.பி.பி.எஸ்.​ கட்டணம் எவ்வளவு?



சென்னை,​​ மே 18: தமிழக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு ​எம்.பி.பி.எஸ்.​ இடத்துக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தொடர்கிறது.

​ ​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ வேலூர்,​​ திருச்சி,​​ மதுரை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் உள்ளன.​ அரசு மருத்துவக் ​கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.​ முதலாம் ஆண்டு படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495.​​ ​ சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ்.​ இடங்களில்,​​ அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதம் அளிக்கப்படும்.​ இந்த இடங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் எவ்வளவு?​ ​ கோவை பி.எஸ்.ஜி.​ மருத்துவக் கல்லூரி,​​ மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி,​​ கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,​​ ஈரோடு மாவட்டம் ​பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன ​(ஐ.ஆர்.டி.)​ மருத்துவக் கல்லூரி என நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.​ இந்தக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு ​கடந்த ஆண்டு 283 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் கிடைத்தன.

​ ​ மதுராந்தகம் அருகே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ கற்பகாம்பிகை மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 இடங்கள் கிடைத்தன;​ இந்த ஆண்டு இந்தக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை அனுமதி ​அளிக்கவில்லை.

​ இந்த மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டும் மாணவர்களைச் சேர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்து விடும் நிலையில்,​​ அரசு ஒதுக்கீட்டுக்கு மீண்டும் 65 ​எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் கிடைத்து விடும்.

​ ​ எனினும் இந்த ஆண்டு சென்னை வண்டலூர் மற்றும் சென்னை திருவேற்காட்டில் புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி ​வழங்கியுள்ளது.​ இந்த இரண்டு கல்லூரிகளிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு தலா ​97 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் கிடைக்கும் என்பதால்,​​ அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.​ இடங்களின் மொத்த எண்ணிக்கை 348-லிருந்து 542-ஆக அதிகரிக்கும்.

கட்டணம் எவ்வளவு?​​ சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.​ இடத்துக்கு ஆண்டுக் கட்டண விவரம்:​ 1.​ ஈரோடு பெருந்துறை ​ஐ.ஆர்.டி.--ரூ.1.30 லட்சம்;​ கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை--ரூ.2.30 லட்சம்;​ ​

கோவை பி.எஸ்.ஜி.--ரூ.2.25 லட்சம்;​ மேல்மருவத்தூர் ​ஸ்ரீ ஆதிபராசக்தி--ரூ.2.5 லட்சம்.

​ ​ நீதிபதி குழு கடந்த ஆண்டு நிர்ணயித்த இந்தக் கட்டணம்,​​ நடப்புக் கல்வி ஆண்டுக்கும் ​(2010-11) தொடரும்.​ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் ​வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

​ ​ எனினும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ள இரண்டு புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.​ கட்டணம் ​நிர்ணயிக்கப்படவில்லை.

சுயநிதி கட்-ஆஃப் எவ்வளவு?​​ அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கவுன்சலிங் நடத்தப்படும் போதே,​​ கடந்த ஆண்டைப் போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.​ இடங்களுக்கும் அதே தினத்தன்று கவுன்சலிங் நடத்தப்படும்.​ சுயநிதி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் மாணவர்கள்,​​ ​முன் தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கு டி.டி.​ செலுத்த வேண்டும்.

​ ​ கடந்த ஆண்டு ​(2009-10) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு வகுப்பு வாரியாக கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்:​ பொதுப் பிரிவினர் ​(ஓ.சி.)-194.75; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-194; பிற்படுத்தப்பட்ட ​(முஸ்லிம் வகுப்பினர்)-193; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-190.75; தாழ்த்தப்பட்ட வகுப்பினர்-184; தாழ்த்தப்பட்ட வகுப்பு ​(அருந்ததியர்)-174.75; பழங்குடி வகுப்பினர்-163.25.

சுயநிதி பி.டி.எஸ்.​ கட்டணம் எவ்வளவு?​​ சென்னை பாரிமுனையில் மட்டும்தான் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது.​ இதில் 85 பி.டி.எஸ்.​ இடங்கள் உள்ளன.​ அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ்.​ கட்டணம்-ரூ.8,495.​ சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 900 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்.​ இடங்கள் உள்ளன.​ அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்.​ இடத்துக்கான கட்டணம் கடந்த ஆண்டு ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.82,000-மாக அதிகரிக்கப்பட்டது.​ அதே ரூ.82,000 கட்டணம் இந்த ஆண்டும் தொடரும்.​​

Tuesday, May 18, 2010

இப்படியொரு சாதனை இந்தியாவுக்கு வேண்டாம்

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மனித உயிரிழப்புகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற சாதனை இந்தியாவுக்கு வேண்டாம் என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.


உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாலோ என்னவோ இந்தியாவில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய மதிப்பிருப்பதில்லை. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதுதான் மிகவும் வேதனையானது.


சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் சீன அரசு மேற்கொண்ட கடும் முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெருமளவு குறைந்து உள்ளது.


சாலை விபத்துகளைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளில் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளில் 10 சத அளவு இந்தியாவில் ஏற்படுகிறது. இங்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உலகில் உள்ள மொத்த வாகனங்களில் 1 சதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சாலையில் பயணிக்கும் 1000 வாகனங்களில் 35 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், உலக சராசரியாக 1000- க்கு 4 முதல் 10 வாகனங்கள் மட்டுமே விபத்தில் சிக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோராண்டும் சாலை விபத்துகளில் சிக்கி சுமார் 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் சீனா மற்றும் அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் 10 சத அளவு குறைந்து வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் 52 சத வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சாலை விபத்துகள் குறைந்து வருவதற்கு அந்த நாட்டில் உள்ள தரமான சாலைகளே முக்கிய காரணம். கடந்த 1930-ம் ஆண்டிலேயே அறிவியல் ரீதியான சாலைகளை இந்த நாடுகள் அமைத்துள்ளன என்று ஐநாவின் சாலைப் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது.


சாலைவிபத்துகளில் உயிரிழப்பவர்களின் 70 சதம் பேரின் குடும்பங்கள் வருமானத்திற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றன. விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைச் சீரழித்துவிடுகின்றன. அதிகரித்துவரும் விபத்துகளைக் குறைக்கவும் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து நமது உயிரையும் சாலையில் பயணிக்கும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கும் இல்லை.


இந்த நிலை மாற வேண்டுமெனில், அரசும், அரசு அதிகாரிகளும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து உண்மையான அக்கறையோடு செயல்படத் தொடங்க வேண்டும். அரசு சாலைப் பாதுகாப்பிற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் நெறிப்படுத்தி சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் சுயநல எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அரசு இயற்றும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் எந்தத் தொய்வும் இன்றி அமல்படுத்த வேண்டும்.


மக்களும் சாலைப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பங்கினை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை முழுமையாக உணர்ந்து போதிய கவனம் செலுத்தி தங்கள் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டிய சீனாவைப் போன்று இந்திய அரசும் சாலை விபத்துகளைக் குறைக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் உலகிலேயே முதலிடம் என்ற சாதனை நமக்கு வேண்டாம். இதனை இந்தியர்கள் என்ற முறையில் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

கிரிக்கெட் என்னும் சூதாட்டம்!

வேகப்பந்து வீச்சாளரின் பந்தை முட்டி போட்டுக்கொண்டு விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே அடிக்க முடியும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் அவரைப் பைத்தியம் என்று சொல்லியிருப்பார்கள். உடலிலும் உள்ளத்திலும் மின்னல் வேகத்தில் இயங்க வேண்டும் என்பதால் டி-20 இளைஞர்களுக்கான ஆட்டமானது.


சூழலுக்கு ஏற்ப துரிதமாக மாறிக்கொண்டே இருப்பது பச்சோத்தனமன்று. புதியவற்றை உள்வாங்கும் தற்காப்பு நிலைதான். இந்தநிலைதான் கிரிக்கெட்டின் இன்றைய புதிய முகம். நான் இப்படித்தான் ஆடுவேன் என்று சொன்னால் இதோ உன் வீட்டுக்குப் போகும் வழி என்று அனுப்பி விடுவார்கள். ஆனால், இன்னமும் நமக்கு நினைவில் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சச்சினின் சதங்கள், கபில்தேவின் சாதனைகள்தான்.


ஆனால், இவையெல்லாம் இப்போது கதைக்கு உதவாது. பழங்கதை பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.

பணத்தின் பின்னால் ஓடுகிறது உலகம். அதில் விளையாட்டு வீரர்கள் மாத்திரம் என்ன விதிவிலக்கா? தங்கள் தேசத்து அணிகளுக்காக விளையாடும்போது அதிக சம்பளம் கிடைக்காத நிலையில், ஐ.பி.எல்.க்காக விளையாடும்போது கிடைக்கிறதே? பிறகு என்ன தேசம் பற்றிய நினைப்பு வரவா போய்கிறது?


மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடுவதில் கிடைப்பதைவிட அதிக பணம் ஐ.பி.எல்.லில் ஆறுவாரம் விளையாடுவதில் கிடைத்துவிடுகிறதே?


தமிழ் இலக்கியங்களில் பக்கங்கள் நிறைந்த, பாத்திரப் படைப்புகள் மிகுந்த இதிகாசங்களை, காப்பியங்களை படிக்கும் நிலை மாறி புதினங்கள், பாக்கெட் நாவல், சிறுகதை, ஒருபக்கக் கதை என்ற நிலை மாறியதே? ஏன்? ரசிகர்களின் விருப்பங்களைப் பொருத்தே. இலக்கியமும் தன் வடிவங்களை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால் அவசர உலகத்தில் உடனடியாகப் படித்துவிட்டுப் போகும் மனோபாவம் தொற்றிக்கொண்டுவிட்டது.


அதைப்போலத்தான் 5 நாள்கள் ஆடப்பட்ட கிரிக்கெட் சோர்வு தந்ததால், 50 ஓவர் அதாவது ஒருநாள் ஆட்டமானது. பின்பு ஒருநாள் ஆட்டமும் சுருங்கி 3 மணி நேரத்தில் முடியும் டி-20 ஓவர் ஆட்டமாகியிருக்கிறது.

இந்தக் குறுகிய கால ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் சொக்கிப் போய் நிற்கிறார்கள் இந்தியாவின் புகழ் வாய்ந்த ஆட்டமான ஹாக்கி பின்னுக்குப் போகாமல் பிறகு என்ன செய்யும்?


இங்கிலாந்து அணியில் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர் சொன்னார் - இன்னும் ஐந்து ஆண்டுகளில் கிரிக்கெட்டின் முகம் மாறிவிடும் என்று. மிகப்பெரிய கண்டுபிடிப்பான டி-20 கிரிக்கெட்டின் மாபெரும் வளர்ச்சி அல்லது பணவியாபாரத்தின் வாசல்களைத் திறந்துவிட்டதற்கான சாவியா என திகைக்க வைக்கிறது.


இங்கிலாந்தில் 2003-ல் டி-20 தொடங்கியபோது கிரிக்கெட் வீரர்கள் அதை ஒரு கேளிக்கையாகத்தான் அதுவும் ஏதோ வேலைகளுக்கு நடுவில் ஒரு புத்துணர்வுக்கான ஆட்டம் என்றுதான் நினைத்தார்கள். பிள்ளையார் பிடிக்கப் போக குரங்கான கதைபோல, விசுவரூபம் எடுத்து நிற்கும் டி-20 ஆட்டத்தைக் கண்டு விளையாட்டு வீரர்கள் உள்பட அனைவரும் ஆடிப்போய்த்தான் இருக்கிறார்கள்.


ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமானபோது ஏற்பட்ட அதே எதிர்ப்பு, இப்போது டி-20-க்கு ஐ.சி.சி. கூட்டத்தில் எதிராக வாக்களித்த ஒரே நாடு இந்தியாதான். ஐ.பி.எல். என்பது விளையாட்டும், வியாபாரமும் கலந்து கலவையாக இன்று நம் கண்முன் கண்ணாமூச்சி ஆடுகிறதே!


அனுபவ வீரர்களை அழைக்காமல் இளம்வீரர்களை அனுப்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதே இதன் வெற்றிக்கு முதல் காரணம். கடைசி பத்து ஓவர்கள் களமிறங்குபவர்களுக்கு கடுமையான நெருக்கடியைத் தந்தது முந்தைய ஆட்டம். ஆனால், டி-20 போட்டிகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. மட்டை வீச்சும், பந்துவீச்சும் சூடு பறக்க வேண்டும். தமது ஆற்றலை வெளிப்படுத்தியே தீர வேண்டும். இல்லையேல் அம்போதான்.


இந்த இமாலயச் சாதனை இருபது வயது இளைஞர்களால்தான் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவுக்கு இளைஞர்கள் வழிகாட்டுகிறார்கள் என்கிற தீர்க்கதரிசன பார்வையைக் கற்றுத் தருகிறது. உலகக் கோப்பைத் தோல்வியின் போது டோனியின் வீட்டுச்சுவரை இடித்த ரசிகர்கள், அவரை 30 கி.மீ. தூரம் தூக்கிச் சுமந்ததற்கு இந்த ஆட்டமே காரணகர்த்தாவாகத் திகழ்கிறது.


இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த டிராவிட் எந்த அவகாசமும் தராமல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்திய அணியை மோசமான ஒரு பின்னடைவிலிருந்து கரைசேர்த்த பெருமை டிராவிட்டை சேரும். இந்த இடைவெளியில்தான் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ்ந்தது எனலாம்.


அதாவது விக்கெட் கீப்பராக இருந்த மகேந்திரசிங் தோனி ஆஸ்திரேலியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பின்புலம் இல்லாத, அடித்தளங்கள் அற்ற தோனி, ஒரு மாயஜாலத்தை ஏற்படுத்தினார். தோற்கடிக்கப்படாத ஒரு பிம்பமாகத் திகழ்ந்தார். இந்தியாவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பகுதிகளுக்கும் கிரிக்கெட் பரவியிருக்கிறது என்பதற்கு தோனியின் வளர்ச்சி ஒரு நல்ல முன்னுதாரணமாகும். ஒரு பம்ப் ஆபரேட்டரின் மகனான தோனியின் வளர்ச்சி மக்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கிறது. 1962-ம் ஆண்டில் மன்சூர் அலிகான் பட்டோடிக்கு ஏற்பட்ட வளர்ச்சி வேகத்தை இதனோடு ஒப்பிடலாம்.


இந்தியாவில் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும், பட்டிதொட்டிவரை ஐந்து வயது சிறுவன் முதல் அறுபது வயது பெரியவர்வரை எல்லோர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்ற ஒரே விளையாட்டு கிரிக்கெட்தான். கிரிக்கெட் பிடிக்காதவர் இருக்கலாம். கிரிக்கெட்டால் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியர்களை இணைக்கும் தேசிய நீரோட்டத்தின் சின்னமாக கிரிக்கெட் திகழ்வதை மறுதலிக்க முடியாது.


இந்த இடத்தில்தான் வருத்தம் நமக்கு மேலோங்குகிறது. தேச ஒற்றுமையைப் பறைசாற்றும் கிரிக்கெட்டின் முகமும், வடிவமும் மாறி, தேசத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்வதை மழுங்கடித்து, மாறாக பணம் காய்ச்சி மரமாக மாறி இருக்கிறதே என்று சொல்கிறபோது நிச்சயம் கண்ணீர் வராமல் இல்லை.


சென்னை அணி, பஞ்சாப் அணி என்று ஏதோ கிளப்களுக்கு ஒரு அணிக்கு விளையாடுவவதில் கிடைக்கும் முக்கியத்துவம், நம் தேசத்துக்காக ஆடும்போது தரப்படவில்லையே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது.

டி-20 என்பது சுருக்கமான கூர்மையான, பணம் புரளும் அணு கதிர் இயக்கத்தைப்போல இருப்பது பெரும் ஆபத்தல்லவா? ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சட்டவிரோத பணபரிமாற்றம், எந்த அணி வெற்றி பெறும் என்கிற மாயத்தோற்ற பரமபத விளையாட்டின் மூலம் கிரிக்கெட் தலைகுனிய வேண்டிய தருணம் இது. ஏனென்றால், விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், தந்திரம், அதிகார போதை, பணம் கறக்கும் காமதேனு என்று மேட்டுக்குடி மக்களின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மீண்டும் ஒரு காலனியாதிக்கத்தையே நினைவூட்டவில்லையா?


புனே, கொச்சி ஆகிய இரு அணிகள் மொத்தம் ரூ. 3,235 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இது இப்போது எட்டு அணிகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒட்டுமொத்தமாகப் பேசப்பட்ட ரூ. 2,853 கோடி ரூபாய்களைவிட அதிகம். சுருங்கச்சொன்னால் 2008 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முகேஷ் அம்பானி கொடுத்ததைவிட ஏழுமடங்கு அதிகம். ஐ.பி.எல்.லின் கமிஷனராக 46 வயது லலித் மோடியின் மாயஜாலம்தான் இத்தனை கூத்துகளும்.


அடிமை வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னால் அது தவறு. ஐ.பி.எல். என்னும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அந்த அடிமை வியாபாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. விளையாட்டு தேக ஆரோக்கியத்துக்கு என்று தொடங்கி, பின்னர் பரிசு என்று ஆரம்பித்து, பணம் காய்க்கும் மரம் என்றாகி, இப்போதும் பெறும் சூதாட்டத்தில் முடிந்திருக்கிறது. இந்த எழுச்சி கிரிக்கெட் அல்லது விளையாட்டின் எழுச்சியா? அல்லது பணக்காரர்களின் பண எழுச்சியா என்கிற சர்ச்சை எழாமல் இல்லை.

இல்லை என்றால் கப்பல் உடைக்கும் தொழில் அதிபர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும், அதிக வேலையே இல்லாத நடிகைகளுக்கும் கிரிக்கெட்டில் என்ன வேலை இருக்கிறது?


கிரிக்கெட்டின்மீது தீராத பற்றும் மாறாத பித்தும் பிடித்தவர்களா? இவர்கள். அதுவும் இல்லை. வர்த்தக பேரத்துக்குத்தானே ஒழிய விளையாட்டின் மீதான ஆர்வம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

கொச்சி அணி வாங்கியதில் எழுந்த சர்ச்சையில் பிரதமர் மன்மோகன் சிங், பராக் ஒபாமா சந்திப்பைக்கூட பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் சசிதரூர். விலைவாசி உயர்வுப் பிரச்னையைவிட சசிதரூர் பிரச்னை எழுப்பிய அதிர்ச்சி அலை மிகப்பெரியது.


ஒரு தேசத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட கிரிக்கெட், சில பணக்காரர்களின் குடையின்கீழ் இளைப்பாறுவதை எந்த இந்தியனும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது?

Wednesday, May 12, 2010

துபையில் முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்க சமுதாயம் ஓரணியில் ஒன்று திரண்டது.


بسم الله الرحمن الرحيم

வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.இந்த இனிய நிகழ்ச்சி தமுமுக துபை மண்டலத் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது சகோதரர் பிலால் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பாக கீழை மஃரூஃப் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது, முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்து கொண்டு எழுச்சி மிகு உரை ஒன்றை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை காண வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர் தனது உரையில் சிலைகளை வழிபடும் ஆத்திகராய் பிறந்து, அறியாத வாலிப பருவத்தில் பெரியாருக்கு கவிதை எழுதிய பொழுது ஒரு ஆர்வ கோளாறில் சேசாஷம் என்ற பெயரை பெரியார்தாசன் என மாற்றிய பிறகு நாத்திகராய் மாறினேன். 2000-இல் தன் நண்பர் ஸிராஜுதீன் மூலம் கிடைத்த சிந்தனைக் கிளர்ச்சி என்னை உண்மையான இறைவனை தேடத் தூண்டியது. அதன் பிறகு 2007க்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் நான் உண்மையான ஏக இறைவனை தெரிந்து கொண்டேன் என்றார். மெய்யானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது என தனது உரையில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

எதையும் இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும், இறைவனுக்கு ஒருபோதும் இணை வைத்து விடக்கூடாது என்ற உன்னதமான தவ்ஹீதை எடுத்துச் சொல்லி, ஒற்றுமையுடன் அனைவரும் திகழ வேண்டும். நாளைய மறுமையில் அனைத்து முஸ்லிம்களும் சுவனம் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உரையாற்றிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தியது. அவருடைய உணர்வுபூர்வமான உரைக்கு கிடையில் மக்கள் அல்லாஹ் அக்பர் என உற்சாகத்துடன் எழுப்பிய பதிலுரைகள் அறிஞர் அப்துல்லாஹுக்கு நல்ல வரவேற்பாக திகழ்ந்தது. சுமார் 1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.
இறுதியில் இஸ்லாமிய அழைப்பாளர் எஸ்.எம்.புஹாரி, நிறைவுரையாற்றினார். பன்னாட்டு இஸ்லாமிய கழத்தின் சார்பில் வருகை தந்த முனைவர் அப்துல்லாஹ் அவர்களை நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியில் பங்கேற்க உதவி பன்னாட்டு இஸ்லாமிய கழகத்தின் தலைவர் அப்துல் கதீம், துணைத் தலைவர் குத்தாலம் அஷ்ரஃப் மற்றும் லியாகத்அலி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமுமுக துபை மண்டல நிர்வாகிகள் மொஹிதீன், கலீல், ஷாஹுல் உள்ளிட்டவர் தலைமையிலான அணியும், இதஜ சார்பில் ஏ.எஸ் இபுராஹீம், ஷாஜித் உள்ளிட்டவர்களான அணியும், தவ்ஹீத் இல்லம் சார்பில் அதிரை ஜமால், ஷாஹுல் உள்ளிட்டவர்கள் தலைமையிலான அணியும், ஜாக் சார்பாக மதுக்கூர் உமர், மற்றும் குலாம், ஜலால் ஆகியோரின் சிறந்த ஏற்பாட்டில் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, May 7, 2010

ஒற்றுமை வலிமையை உலகிற்க்கு உணர்த்துவோம்.....


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
 
21 March 2010 பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க,
 
கூட்டத்தில் பேரா.அப்துல்லா உரையில் கூறிய முக்கியமான கருத்து:---
 
உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.
 
இதனை நாம் சிந்திக்க வேண்டும்.
 
எனது முஸ்லிம் சமுதாயமே ! 
 
பிரிந்து கிடப்பவர்களை இறை உவப்பை சொல்லி ஒன்றினைக்கக்கூடிய இஸ்லாம் மார்க்கம்.
எல்லா வகையிலும் ஒற்றுமையை முதன்மையாக கூறும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்.
 
ஆகவே, இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாம் சமுதாயத்தின் ஒற்றுமை வலிமையை உலகிற்க்கு உணர்த்துவோம்.
 
 
ஓன்றினைந்து போராடுவோம் - இறை உதவியை பெற்றிடுவோம்.

Govindakudi Mosque

zakat calculator