Friday, June 4, 2010
மொபைல் பயன்படுத்தினால் ஆபத்து வருமா?
கடந்த 2009ம் ஆண்டு முடிவில் உலகம் முழுவதும், 46 லட்சம் மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்ததாக சர்வதேச தகவல் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்தை தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போன்று இதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக மொபைலை அதிகளவில் பயன்படுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான கோளாறுகளும், ஆண்களுக்கு உயிர் அணு உற்பத்தி குறைபாடுகளும் ஏற்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகளவில் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்திலுமே எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டுவிதமான புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. இதில், மூளைப்பகுதியில் ஏற்படும், "மெனிஞ்சியோமா' புற்றுநோய்க் கட்டிக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதிலும் மோசமான புற்று நோய்க்கட்டி ஏற்படும் என்று எச்சரித்ததும் உண்டு.
பார்சிலோனாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி எலிசபெத் கார்டிஸ் கூறுகையில், "மொபைல் பயன்படுத்துவதால், வாழ்க்கைக்கு வளம் சேர்க்கலாம். ஆனால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. குறைந்த அளவில் பயன்படுத்தினாலும், பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது' என்று தெரிவித்துள்ளார். மொபைல் பாதிப்பு தொடர்பாக, கடந்த மாதம் 13 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வரும் மொபைல் போன்களில் எப்.எம்., ரேடியோ மற்றும் "டிவி'யும் உள்ளது. இதற்கு ஆன்டெனாவாக பயன்படுபவை அதில் உள்ள, "இயர் போன்' தான். ரேடியோ மற்றும் "டிவி'யில் இருந்து வரும் வானொலி அலைகள் மிகக்குறைந்த திறன் கொண்டதாயினும், அவை மனித உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடியதாகும். இத்தகைய ஆன்டெனாக்கள் மனித உடலிலிருந்து குறைந்தபட்சம் 40 செ.மீ., தூரத்திலாவது இருக்க வேண்டும். ஆனால், மொபைல் போன் எப்.எம்., கேட்கும் ஒருவர் "இயர் போனை' காதில் வைத்தவாறு கேட்கிறார். நாளடைவில், அது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்லாது, மொபைல் போன்களை விமானம் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலிருந்து வரும் மின் காந்த அலைகள் விமானத்தில் உள்ள நுண்ணிய இயந்திரங்களையும் பழுதாக்கிவிடும் தன்மை கொண்டதாகும். மருத்துவமனைகளிலும், அங்குள்ள மருத்துவ சாதனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் இவைகளுக்கு ஆதாரமாக பத்தாண்டுகள் அல்லது அதேமாதிரி தொடர்ந்து சோதனைகள் செய்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment