Thursday, February 4, 2010

தொழுகை

நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவற்றிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக, (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூறுவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்.

அல்குர்ஆன் 29:45

'நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழிமுறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால்; உங்கள் நபியின் வழிமுறை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழிதவறியவராவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி),  நூல்: முஸ்லிம்

'கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி),  நூல்: புகாரி, முஸ்லிம் 'ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதைவிட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது முடித்ததும், தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக, 'இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக என்று கூறி பிரார்த்திப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),  நூல்கள்: புகாரி, முஸ்லிம்


'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டுவர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்துவிட விரும்புகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),  நூல்கள்: புகாரி, முஸ்லிம்

'நயவஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷா தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் அவ்விரண்டுக்கும் வருவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator