டெல்லி: பட்ஜெட் டில் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல பொருட்களின் விலை உயரப் போகிறது. சிலவற்றின் விலை குறையப் போகிறது.
விலை உயரும் பொருட்கள்..
பெட்ரோல், டீசல், கார், டி.வி., சிகரெட், புகையிலை, ஏர் கண்டிஷனர்கள், தங்கம், வெள்ளி, இறக்குமதி செய்த வெள்ளி நகைகள், பிளாட்டினம்.
தங்க கட்டிகள் மீதான இறக்குமதி வரி 10 கிராமுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், இதர வகையிலான தங்கம் இறக்குமதியின் மீதான வரி ஒரு கிராமுக்கு முன்பு 500 ரூபாயாக இருந்தது தற்போது 750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இறக்குமதி செய்யும் வெள்ளி ஆபரணங்களுக்கான வரி, ஆயிரம் கிலோவுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 10 கிராம் பிளாட்டினத்தின் மீதான இறக்குமதி வரி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதனால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலை உயரும்.
60 மில்லி மீட்டருக்கும் குறைவான சிகரெட் தவிர்த்து, அனைத்து வகையான சிகரெட்டுகளுக்கும் உற்பத்தி வரி ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 363 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சுவைக்கும் புகையிலை ரகங்களுக்கான உற்பத்தி வரி 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகரெட், புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது.
வீடு கட்ட இனி ரொம்பச் செலவாகும்..
வீடு கட்டுவதற்கு அத்தியாவசிய தேவையான சிமெண்ட் விலையும் உயர்கிறது. 50 கிலோ மூட்டையின் அடிப்படையில் ஒரு டன் சிமெண்டுக்கு 185 முதல் 315 ரூபாய் வரை புதிய உற்பத்தி வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் ஒரு டன் சிமெண்ட்டின் சில்லறை விலை 40 முதல் 65 ரூபாய் வரை விலை உயரும்.
இதேபோல், மைக்ரோ புராசசர், பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றின் விலையும் உயர்கின்றன. இவற்றுக்கு அளித்து வந்த உற்பத்தி வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதுடன் 4 சதவீதம் வரை உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.
கூலிங் கிளாஸும் விலை உயரும்..
குளிர் கண்ணாடிகள் எனப்படும் கூலிங் கிளாஸ்கள் மீது10 சதவீதம் வரை உற்பத்தி வரி விதிக்கப்பட்டு உள்ளதால் இவற்றின் விலையும் அதிகரிக்கிறது.
சேவை வரியின் கீழ் மின் உபயோகம் வருவதால் மின் கட்டணமும் உயரும்.
தொழில் நிறுவனங்களின் சம்பளம்பெறுவோர் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சேவை வரியின் கீழ் வருவதால் இதற்கான செலவும் அதிகரிக்கிறது. இது தவிர, மருத்துவ இன்சூரன்சு திட்டங்களும் சுகாதார சேவையின் கீழ் வருவதால், இவற்றுக்கும் சேவை வரி உண்டு.
ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவுகள் மீதான காப்புரிமைகள் மீது சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடகம், இதர கலைப்படைப்புகளுக்கு இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
பலூன் விலை குறையும்...
பலூன்களுக்கான உற்பத்தி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொம்மைகளுக்கும் உற்பத்தி வரி நீக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலை குறையும்.
இந்தியாவில் தயாரான மொபைல் போன்கள், மொபைல்போன் உதிரி பாகங்கள், மைக்ரோ வேவ் ஓவன்கள், பாக்கெட்டுகளில் அடைத்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், மடிப்பு ஜவுளி பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், மென்தா எண்ணை, நீள மிளகு, பெப்பர் மின்ட், மருத்துவ துறையில் பயன்படும் சி.இ.எல். விளக்குகள், செட் டாப் பாக்சுகள், காம்பாக்ட் டிஸ்க்குகள், லேட்டெக்ஸ் ரப்பர் இழை, அட்டை பெட்டிகள் போன்றவற்றின் விலை குறைகிறது.
No comments:
Post a Comment