இந்தியாவில் சின்னத்திரையில் ஹிந்தி சேனல்களுக்கு அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான சேனல்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 14 தமிழ் சேனல்கள் உள்ளன. இது தவிர அந்தந்த ஊர்களில் கேபிள் டி.வி. இணைப்பு தருபவர்கள் தனியாக உள்ளூர் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
மக்களைச் சிந்திக்க விடாமலும், நற்காரியங்களைச் செய்யவிடாமலும் தடுக்கும் முதல் சாதனமாக இந்தத் தொலைக்காட்சிகளே உள்ளன.
ஆரம்பத்தில் இலவச சேனல்களாக இருந்த பல சின்னத்திரைச் சேனல்கள், இன்று கட்டணச் சேனல்களாக மாறி உள்ளன. மக்களுக்கு இலவசமாக சில காலங்கள் உருப்படாத காட்சிகளைத் தந்து, அதில் அவர்களை அடிமையாக்கி, பின்னர் அவர்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கத் தீட்டம் தீட்டி செயல்படுகின்றன பல முன்னணி சேனல்கள்.
சமீபத்தில் இலவச சேனலாக இருந்த முன்னணி டி.வி. சேனல் ஒன்று, கட்டண சேனலாக மாற்றப் பட்டது. இதற்காக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தினர். அந்த டி.வி. சேனல், ஒரு வீட்டின் இணைப்பிற்கு மட்டும் 32 ரூபாய் கேட்பதாக கேபிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் மாதத்திற்குப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொண்டிருக்கிறது அந்த டி.வி. சேனல்.
கடுமையான கட்டண உயர்வை ஏற்று இன்றும் ஏராளமானோர் அந்த சேனல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல செய்திகள் நிறைந்திருந்தால் அதற்காக செலவழிப்பதில் தவறில்லை. முழுக்க முழுக்க சினிமா, சீரியல் என்று மக்களை அடிமைப்படுத்தி நல்ல செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் இவற்றிற்குப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டுமா?
டி.வி. பார்ப்பதில் முதடம் வகிக்கும் பெண்களை நாடகத்தில் அடிமையாக்கி இப்போது அறுவடை செய்கிறார்கள்.
குறிப்பாக, பெரும்பாலான சின்னத்திரைச் சேனல்களில் மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் மிக மிகக் குறைவு தான். அதிலும் அந்த டி.வி.யை எடுத்துக் கொண்டால் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணி வரையும் தொடர் நாடகங்கள். அதில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் நாடகங்களும் அடக்கம்.
பெரும்பாலான நாடகங்கள் சமூகச் சீரழிவையே ஏற்படுத்துகின்றன. தவறுகள் எந்த விதத்திலெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த நாடகங்கள் நல்ல (?) வழி காட்டுகின்றனர். இதனால் கெட்டுப் போனவர்கள் ஏôரளம்.
இடையில் சில நிமிடங்கள் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் அந்த டி.வி. சேனல் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவான செய்திகள். அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்காத செய்திகள். நாட்டில் எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராக இருந்தால் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான செய்திகளை அதில் காணமுடிவதில்லை.
முழுக்க முழுக்க பயனற்ற நாடகங்கள், சினிமா, ஆபாசம், வன்முறைகள் நிறைந்த இந்தத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக எவ்வளவு கட்டண உயர்வையும் ஏற்க மக்கள் குறிப்பாகப் பெண்கள் தயாராக உள்ளனர்.
சின்னத்திரையில் வர்த்தக விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தைக் கண்டு வரும் முதலாளிகள், கட்டண அலைவரிசையாக மாற்றி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.
தென் மாநிலங்களில் விளம்பரக் கட்டணம் கடுமையாக உள்ள ஒரே சேனல் அந்த டி.வி. மட்டுமே! வர்த்தக விளம்பரம் மூலம் கடுமையான வருமானம் கிடைத்தாலும் நடுத்தர வர்க்கத்தினர் மடியிலும் கை வைக்கத் துவங்கியுள்ளனர் அந்த டி.வி. உரிமையாளர்கள்.
எந்தத் தொலைக்காட்சியாக இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான செய்திகளும் உண்மை நிலவரமும் நமக்குக் கிடைக்கும்.
கட்டணங்களை கடுமையாக உயர்த்தும் போது அந்த டி.வி. சேனல்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இது போன்ற கடுமையான கட்டண உயர்வு ஏற்படாது.
No comments:
Post a Comment