அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
- பேசினால் பொய் பேசுவான்,
- வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
- நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.
பொய்யின் வகைகள்: -
அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
வியாபாரத்தில் பொய் கூறுவது: -
“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)
கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: -
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உள்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -
யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
குழந்தைகளிடம் பொய் சொல்வது: -
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)
பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -
உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.
பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: -
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: -
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -
இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -
(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)
பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்¢ பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
- ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
- யுத்தத்தின் போது
- மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)
No comments:
Post a Comment