Friday, September 17, 2010

ஆன்-லைனில் வேலைவாய்ப்புக்கு பதிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து, வேலைவாய்ப்பு பதிவுகளை ஆன்-லைன் மூலம் செய்யும் வசதியையும், "எம்பவர்' என்ற புதிய இணையதளத்தையும் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை கணினிமயமாக்கல் பணி, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக அனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டன. வேலைவாய்ப்பகத்தின் சேவைகளை ஒளிவுமறைவற்ற வகையில் அளிக்க, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்க, தமிழக அரசு 5.02 கோடி ரூபாயை ஒதுக்கியது. இப்பணிகள், "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம், "எம்ஜீஸ்' நிறுவனத்திடம் புதிய மென்பொருள் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. இப்பணி, "புராஜக்ட் எம்பவர்' என பெயரிடப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கான புதிய மென்பொருளும், இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. http://www.tnvelaivaaippu.gov.in/   என்ற இந்த புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த புதிய இணையதளத்தின் மூலம் முதற்கட்டமாக பதிவுதாரர்கள் அனைவரும் ஆன்-லைன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம். இனி புதிதாக பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுக தேவையில்லை. மேலும், பதிவு மட்டுமன்றி ஆன்-லைன் மூலம் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் வருவதால் ஏற்படும் போக்குவரத்துச் செலவு மற்றும் இதர செலவுகள் தவிர்க்கப்படும். இணையதளத்தில் 65 லட்சம் வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் விவரங்கள் அளிக்கப்படும். இதை பார்வையிட்டு தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இணையதளத்தில் பதிவுதாரர்களின் விவரங்களில் மாறுபாடு இருந்தால், உரிய சான்றிதழுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி சரி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு விவரங்களை சரி பார்ப்பதற்காக, பதிவுதாரர்களுக்கு இம்மாதம் 15 (நேற்று) முதல் ஜனவரி 14ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக, வேலையளிப்பவர்களுக்கு பட்டியல் அனுப்பும் பணி, 2011 ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும். பதிவுதாரர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் பெற உதவியாக, பதிவுதாரர்களின் விவரங்களை பார்வையிடும் வகையில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator