டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது."என் பணியில் டென்ஷன்' என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபி' என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார். ""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார். ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,''என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,''என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.
No comments:
Post a Comment