Monday, August 29, 2016

அனஸ்தீசியா(மயக்க மருந்து) - என்ன செய்ய வேண்டும்?



காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டன. 

டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் முதன்முதலில் ஈதர் என்ற மயக்க மருந்தை நோயாளிக்கு அளித்தார். அதன் மூலம், நோயாளிக்குக் கழுத்தில் இருந்த கட்டி, வலி இன்றி அகற்றப்பட்டது. இன்று, பல் பிடுங்குவதில் இருந்து சிசேரியன் வரை எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுவது இல்லை.

அனைவராலும் மயக்க மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது. சிறிது அதிகமானாலும், உயிரிழப்புகூட ஏற்படும் என்பதால், இதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டும்தான் மயக்க மருந்தைக் கொடுக்க முடியும். இதற்கு, அனஸ்தீசியா என்ற பிரத்யேக மருத்துவப் பிரிவே உள்ளது.

அனஸ்தீசியா

நோயாளிக்கு உடல் முழுவதையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோஉணர்வற்றதாக, வலியற்றதாக மாற்ற, மருந்து அளிப்பதை அனஸ்தீசியா என்கிறோம். மொபைலில் சைலன்ட் மோடு இருப்பது போல, முழு உடல் அல்லது குறிப்பிட்ட பகுதியைத் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதுதான் அனஸ்தீசியா. இதன் மூலம், வலி என்ற விஷயமே நோயாளிக்குத் தெரியாது.

யாருக்கு, என்ன அளவு, என்ன மாதிரியான மயக்க மருந்து என்பதை முடிவுசெய்யும் திறன் பெற்றவரை ‘மயக்க மருந்தியல் நிபுணர்’ என்கிறோம். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் செய்யப்படும் அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பொறுத்து, எந்த வகை மயக்க மருந்தைச் செலுத்துவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எந்த வகையாக இருந்தாலும், அதைத் தேர்ந்த மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். பொது மருத்துவர், செவிலியர் என்று யார் வேண்டுமானாலும் மயக்க மருந்தைக் கொடுக்க முடியாது.

 லோக்கல் அனஸ்தீசியா

உடலில் ஒரு சிறு இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதற்காக லோக்கல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பற்களில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா அளிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிலும் தேவைப்படும் அளவுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும். இதனால், அந்தப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்படும்போது, நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

ரீஜனல் அனஸ்தீசியா

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு என்றால், அந்தப் பகுதி முழுவதுமே உணர்வு நீக்கம் செய்ய மருந்து அளிப்பதை ‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்பார்கள். உதாரணமாக, கை மூட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனில், ஒரு பக்க கை, கால் மரத்துப்போக மயக்க மருந்து தரப்படும். ஊசி மூலமாகவே இந்த வகை மயக்க மருந்துகள் செலுத்தப்படும். ரீஜினல் அனஸ்தீசியாவில் இரண்டு வகை இருக்கின்றன.

அடிவயிறு, இடுப்பு, மலக்குடல், கால் மூட்டு  போன்ற இடுப்புக்குக் கீழே இருக்கும்  இடங்களில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தால், முதுகுத்தண்டுக்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒரு ஊசி மட்டும் போடுவார்கள். இதனால், இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் மட்டும் முற்றிலும் மரத்துப்போகும். இதை, ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பார்கள்.

சிசேரியன் முதலான அறுவைசிகிச்சைகளுக்கு ‘எபிடியூரல் அனஸ்தீசியா’ என்ற முறை கையாளப்படுகிறது. சில அறுவைசிகிச்சைகளில், வலி மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதைக்  கட்டுப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகுத்தண்டுக்குக் கீழே ஊசி மூலம் கதீடர் எனும் குழாய்  இணைக்கப்பட்டு, அதன் வழியே தொடர்ச்சியாக மயக்க மருந்துகள் செலுத்தப்படும். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் செய்யப்படும்  அறுவைசிகிச்சைகளுக்கு இந்த முறையில் மயக்க மருந்துகள் செலுத்தப்படும்.

ஜெனரல் அனஸ்தீசியா 

‘புரொப்பஃபால்’ (Propofol) முதலான மயக்க மருந்துகள் ‘ஜெனரல் அனஸ்தீசியா’ வகையைச் சேர்ந்தவை. ஒரு சில அறுவைசிகிச்சையின்போது நோயாளியைத் தற்காலிகமாக சுயநினைவை இழக்கச்செய்ய  ஜெனெரல் அனஸ்தீசியா முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் நோயாளி முற்றிலும் சுயநினைவு இன்றி இருப்பார். செயற்கை ஆக்சிஜன் கொடுக்கப்படும். மயக்க மருந்துகள் டிரிப்ஸ் வழியாகச் செலுத்தப்படும். 

இதில் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளால், தசைகள் செயற்கையாகச் செயல் இழக்க வைக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படும். இந்தத் தசைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர தனி மருந்துகள் தந்து, படிப்படியாக நோயாளியை மீட்டு, இயல்புநிலைக்குக் கொண்டுவருவார்கள். அதுவரை, மயக்கவியல் நிபுணர், செவிலியர்கள் உடன் இருந்து கண்காணிப்பர்.

யாருக்கு, என்ன அளவு தர வேண்டும்?

நோயாளியின் எடையைப் பொறுத்தே மயக்க மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்படுகின்றன. ரிஸ்க் என்பது எல்லாவற்றிலும் உள்ளதுபோல, இதிலும் இருக்கிறது. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இல்லாத, இயல்பான ஆரோக்கியமான நபருக்குப் பாதிப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். 

பல் அறுவைசிகிச்சைகளில் லிக்னோகைன் எனும் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இது, 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை வாயை மரத்துப்போகச்செய்யும். இது போல, ஒவ்வொரு மயக்க மருந்துக்கும் கால அளவு இருக்கிறது. இதனை, மருத்துவர்கள் அனுமதி இன்றி எந்தக் காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது. 

ஒரு நோயாளி, அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் முன்பு, பிரீமெடிகேஷன்  கொடுப்பது, தொடர்ந்து அறுவைசிகிச்சையின் போது உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது, அதற்கு ஏற்ப உடனடியாக மருந்துகள் தர வேண்டியது, அறுவைசிகிச்சை முடிந்து மீண்டும் நலம் பெற்றுத் திரும்பும் வரை கண்காணிக்க வேண்டியது மயக்க மருந்தியல் மருத்துவரின் கடமை.

ஏன் மயக்க மருந்தியல் மருத்துவர் ஆலோசனை தேவை?

எல்லா பிரச்னைகளையும் கண்டறிய பரிசோதனைகள் பயன்படாது. சிகிச்சை வரலாறு தெரிந்தாலேபோதும். ஒரு நோயாளியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளை சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மட்டும் அல்லாமல் மயக்க மருந்தியல் மருத்துவரிடம் தவறாமல் சொல்ல வேண்டும்.   சிலருக்கு, சாதாரண குரோசின் முதலான வலி நிவாரணி மாத்திரைகளேகூட அலர்ஜியாக இருக்கும். எனவே, எந்தப் பொருள் அலர்ஜி என்பதை மறைக்கக் கூடாது. பெற்றோர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதுபற்றி தெரிவித்து, ரிப்போர்ட் இருந்தால் எடுத்து வர வேண்டும். ஏனெனில், எந்த மயக்க மருந்து எப்படி வேலை செய்தது என்பதை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். 

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லை எனில் நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் சிகிச்சையளிக்கும்போது பாதிப்புகள் ஏற்படலாம். ஆஸ்துமா, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, டெங்கு  காய்ச்சல், சர்க்கரை நோய், நெஞ்சு வலி போன்றவை ஏற்கெனவே வந்திருந்தால், மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

சந்தேகங்கள் கேட்கத் தயங்கக் கூடாது. அறுவைசிகிச்சை முடிந்து நலமான பிறகு அறுவைசிகிசசையின்போது, எந்தெந்த சமயங்களில் என்னென்ன மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன, அதற்கு உங்கள் உடல் என்ன எதிர்வினை செய்தது என்பதை எழுத்துப்பூர்வமாக கேட்டுப் பெறுவதும்கூட நோயாளியின் உரிமை.

 பரிசோதனை அவசியம்!

மயக்க மருந்தால் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பக்கவிளைவு ஏற்படும் என்பதால், பல பரிசோதனைகள் செய்த பிறகே ஒருவருக்கு என்ன மயக்க  மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்க முடியும். உதாரணமாக, ஒருவருக்கு ரத்தம் வெளியேறும் பிரச்னை இருந்தால், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்வது எளிதான விஷயம் இல்லை. அதேபோல, கல்லீரல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால், மயக்க மருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்போகும் நபருக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை, யூரியா கிரியாட்டின் பரிசோதனை, குளுக்கோஸ் அளவுகள், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்ட பிறகுதான், ஒருவருக்கு எந்த வகையான மயக்க மருந்து தருவது என முடிவுசெய்யப்படும்.

நிபுணரிடம் பேசுங்கள்!

பெரும்பாலானவர்கள், அறுவைசிகிச்சை  செய்யும் சமயத்தில் தனக்கு என்ன மருந்து செலுத்தப்பட்டது, அதன் இயல்பு என்ன என்பதைக்கூட தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது.ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் மட்டும் அல்லாமல், மயக்க மருந்தியல் நிபுணரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டியதும் முழுத் தொடர்பில் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator