Monday, July 4, 2011

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

”இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)




”மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.” (திருக்குர்ஆன், 083:004 – 006)


இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் – எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட – மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது…


”நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.” (திருக்குர்ஆன், 020:015)


"அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..” (திருக்குர்ஆன், 31:34)

மறுமை நாள் எப்போது வரும்”? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ”மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்”? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ”அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல” என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!


இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்…

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்

2. தஜ்ஜால்

3. (அதிசயமானப்) பிராணி

4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.

5. ஈஸா (அலை) இறங்கி வருவது.

6. யாஃஜுஜ் மஃஜுஜ்

7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.

10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.

”இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்…

”அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.” (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.














No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator