உலக வங்கிக்கு இந்தியா மீது அளவற்ற பாசம். அதனால்தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவ்வப்போது ஏதாவது ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
"மாறிவரும் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு- உலக வங்கி அறிக்கை' மே 17-ம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின் பரிந்துரை என்னவென்றால், இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான். பொதுவிநியோகத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டோமானால், மக்களுக்கு எப்படிக் குறைந்தவிலையில் இன்றியமையா உணவுப் பொருள்கள் கிடைக்கும்?
"மானியத்துக்கு ஈடாக அவர்களிடம் பணத்தைக் கொடுங்கள்' என்கிறது உலக வங்கி. எவ்வளவு கொடுக்கலாம் என்பதையும் உலக வங்கியே சொல்கிறது. அதாவது, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் பெண்மணிக்கு, ரூ.1,100 கொடுங்கள். இந்தப் பரிந்துரையை நியாயப்படுத்த உலக வங்கி சொல்லும் காரணத்தைக் கேட்டால், நமக்கும்கூட முதலில் இது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து நிதானமாக யோசிக்கும்போதுதான், இது எவ்வளவு முட்டாள்தனமான, இந்திய எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத யோசனை என்பது புரியும். இந்தியா முழுவதிலும் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியன வழங்கப்படுகின்றன. இப்பொருள்களை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக அரசுக்கு ஏற்படும் மானியச் செலவு ரூ.45,000 கோடி. இதில் 60 விழுக்காடு உணவுப்பொருள்
கடத்தல்காரர்களால் வெளிச்சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ரூ.27,000 கோடி வீணாகிறது. ஆகவே, யார் பயனாளியோ அவர்களுக்கு அதிகவிலையில் விற்கப்படும் சர்க்கரை, அரிசி, கோதுமை வாங்குவதற்காக மாதம் ரூ.1,100 கொடுத்துவிட்டால் போதும். நேரடியாக ஏழைகள் பயன்பெறுவார்கள் என்பது உலக வங்கிஅறிக்கையின் வாதம். தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி முற்றிலும் இலவசமாகவும் மற்ற மாநிலங்களில் விலை குறைவாகவும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படுவதால், ஏழைகள் ஏதோ வேளைக்குக் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். கையில் காசைக் கொடுத்து, மிச்சத்தை நீங்களே போட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலைமை வந்தால், பெரும்பாலான குடும்பங்களில் அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டுபோய் மது குடித்து, சூதாடி, ஊதாரித்தனமாகச் செலவு செய்பவர்கள் இந்தியக் கணவன்மார்களாகத்தான் இருப்பார்கள்.
பெண்களும், குழந்தைகளும் பட்டினியில் கிடக்கும் நிலைமை உருவாவது மட்டுமல்ல, குற்றங்களும் அதிகரிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் ரேஷன் அரிசி கடத்தப்பட்டாலும், எவ்வளவுதான் குறைந்தவிலை மளிகைப் பொருள்கள் வெளிச்சந்தைக்கு வந்தாலும், எவ்வளவுதான் மண்ணெண்ணெய் ஊற்றும் தேதியைத் தள்ளிப்போட்டு ஏமாற்றி, கொஞ்சம் திசைதிருப்பப்பட்டாலும், தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் இன்னமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
பொது விநியோக முறையில் நிச்சயமாகக் குறைகள் இருக்கின்றன. குறைகள் இருப்பதால்தான் தினமும் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்குகின்றன. ஆனால், இவ்வாறு பிடிபடும் ரேஷன் அரிசி மூட்டைகளில் 90% ஏழைகளை ஏமாற்றிய அரிசி அல்ல. வசதி படைத்தவர்கள் வாங்காமல்விட்ட அரிசி. வாங்காமல் விட்ட அரிசிக்குத்தான்,
முறைகேடாகக் கணக்கு எழுதப்பட்டு, அரிசிஆலையில் மறுஅரைவை (இதைக் கடத்தல்காரர்கள் பாலிஷ் போடுதல் என்கின்றனர்) செய்து வெளிமாநிலங்களில் விற்கிறார்கள். இதன் மூலம் கடத்தல்காரர்களுக்கு, ஒரு கிலோ அரிசிக்கு, (லஞ்சம் கொடுத்ததுபோக), ரூ.7 முதல் ரூ.10 வரை லாபம் கிடைக்கிறது. மற்ற பொருள்களான பாமாலின், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியன வெளிச்சந்தையில் ஏற்படும் விலைவேறுபாடுகளைப் பொறுத்து கடத்தலின் அளவு குறையும் அல்லது கூடும். அரசின் நடவடிக்கை என்பது, வசதி படைத்தவர்கள் வாங்காமல் விட்ட பொருள்கள், மீண்டும் ஏழைகளுக்கே கிடைக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அதற்குக் கணக்குத் தணிக்கை மிகவும் கடுமையாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை 250-க்கு மிகாமல் பார்த்துக் கொண்டு, யார்யார் என்னென்ன வாங்கியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக நுகர்வோர் பார்க்கும்படி செய்ய வேண்டும். பொதுவிநியோகக் கடைகள் அனைத்திலும், அரிசி, பருப்பு அனைத்தையும் பை அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கும் முறை அமலுக்கு வரவேண்டும். நுகர்வோர் எடையைச் சரிபார்க்க மின்னணு தராசு இருக்க வேண்டும்.
பொருள்களை அட்டைதாரரின் விரல்ரேகைப் பதிவுக்குப் பின்னரே வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் கணினிகள் மூலம் இணைக்கப்பட்டு, துல்லியமான கையிருப்பு, விநியோகம் கண்டறியப்படவேண்டும். இவற்றைச் செய்தாலே பொதுவிநியோகத்தில் முறைகேடுகள் 99 விழுக்காடு குறைந்துவிடும். இதைவிடுத்து, பொதுவிநியோகத் திட்டத்துக்கு முடிவு கட்டிவிட்டு, பணப் பரிவர்த்தனை (தில்லியில் இதைப் பரிசோதனை அடிப்படையில் செய்கிறார்கள். அதற்குப் பெயர் "பரிவர்த்தனை') செய்வது இந்தியாவுக்கு ஏற்புடைய ஏற்பாடாக அமையாது. நோயாளியைப் பார்க்க வருகிறவரெல்லாம், இந்த நோய்க்கு இன்னார் இந்த மருத்துவத்தால் குணமடைந்தார் என்று சொல்வார்கள்தான். அதற்காக, அதையெல்லாம் நடைமுறைப்படுத்த முயல்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோலத்தான் உலக வங்கியின் ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்வதும். இந்தியாவில் தென் மாநிலங்களிலும், சில வட மாநிலங்களிலும் தவிர, பெருவாரியான மாநிலங்களில் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான பொது விநியோக முறை இல்லை. இதுதான் தீவிரவாதம் பரவுவதற்கான காரணிகளில் ஒன்று. பொது விநியோக முறையைப் பலப்படுத்தி, பரவலாக்கி, சீர்படுத்துவதை விடுத்து, முற்றிலுமாகச் சிதைப்பது என்பது "பட்டினிப் போராட்டத்தை' வலிய வரவழைக்கும் ஆபத்தான முடிவு. உச்ச நீதிமன்றம் அரசின் உணவுக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் தானியங்களை வீணாக்காமல் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு விநியோகிக்கச் சொன்னால், விநியோக முறையையே சீர்குலைக்கச் சொல்கிறது உலக வங்கி.
உலக வங்கி கடன் கொடுத்து வசூலிப்பதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வோம். போதும் இவர்களது விபரீத ஆலோசனைகள்!

No comments:
Post a Comment