Tuesday, April 12, 2011

கல்வியின் மேன்மை



 
கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ""கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்." (நூல்: ஸுனன் இப்னு மாஜா)
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை முஸ்லிம் கல்வியைத் தேடவேண்டும். கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம், அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான், இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம். (அல்குர்அன் 35:28)

பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும். அவர்கள்தான் இப்பிரபஞ்சத்தை படைத்து வாழவைத்து பிறகு (மறுமையில்) உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஆற்றலையும் புரிந்து கொள்ளமுடியும். அல்லாஹ் அந்த அறிஞர்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மைப் படுத்துகிறான்

(நபியே) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்த குர்அனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோறெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குர்அன் 39:9)

ஸஃப்வான் இப்னு அஸ்ஸப்ல் அல் முராதி ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர் ""இறைத்தூதரே! நான் கல்வியைத் தேடி வந்துள்ளேன்" என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ""கல்வியைத் தேடுபவரை நான் வரவேற்கிறேன். கல்வியைத் தேடுபவர்களை மலக்குகள் தங்களது இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வானம்வரை கூடிவிடுகின்றார்கள். வானவர்கள் அவர் தேடும் கல்வியின்மீது கொண்ட அன்பினால் இப்படி சூழ்ந்து கொள்கிறார்கள்" என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரகுல்ஹாகிம்)

கல்வியின் மாண்புகள் மற்றும் அதைத்தேடுவதில் ஆர்வமூட்டும் சான்றுகள் பல உள்ளன. உண்மை முஸ்லிம் கற்பவராக அல்லது கற்றுக்கொடுப்பவராக இருப்பார். மூன்றாமவராக இருக்கமாட்டார்.
மரணிக்கும்வரை கற்பார்

உயரிய பட்டங்களைப் பெற்று, பொருளாதாரத்தை வளப்படுத்தி, நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமாக ஆக்கிக் கொண்டு அத்தோடு மட்டுமே விட்டுவிடுவது உண்மையான கல்வியல்ல. மாறாக, ஞானத்தின் பொக்கிஷங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக அய்வுகளைச் செய்துவர வேண்டும். கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி கல்வியை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

""என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தைப் அதிகப்படுத்து" என்று நீர் பிரார்த்தனை செய்வீராக!. (அல்குர்ஆன் 20:114)
நற்பண்புகளுடைய நமது முன்னோர்கள் கல்வியில் உயரிய அந்தஸ்தை அடைந்திருந்தும் தங்களது வாழ்வின் இறுதிவரை கல்வியைத் தேடி ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்கள். அதைத் தொடர்வதன் மூலமே கல்வி உயிர்பெற்று, வளர்ச்சியடையும் என்றும் கல்வியில் ஆய்வு செய்யாமல் புறக்கணிப்பதால் அது ஜீவனற்றுப் போய்விடுமென்றும் கருதினார்கள். கல்வி கற்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர்கள் கொண்டிருந்த முக்கியத்துவமும் அதை செயல்படுத்துவதில் அவர்கள் கொண்டிருந்த ஆவலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.

இமாம் இப்னு அப்தில் பர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அபீ கஸ்ஸப்ன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள், ""நீ கல்வி கற்கும் காலமெல்லாமல் அறிஞனாக இருப்பாய். தேவையில்லையென நினைத்து ஒதுங்கிவிட்டால் மூடனாகி விடுவாய்."
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: 

""கல்வி உடையவர் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவது முறையற்ற செயலாகும்."

இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ""எதுவரை கல்வி கற்பீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""மரணம்வரை" என்று பதிலளித்து, ""எனக்கு பயனளிக்கும் எதேனும் ஒரு விஷயத்தை இதுவரை நான் எழுதிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லவா?" என்று கூறினார்கள்.

இமாம் அபூ அம்ரு இப்னு அலா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம், ""மனிதன் கல்வி கற்றுக்கொள்ள உகந்த காலம் எது?" என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""அவன் வாழ்வதற்கு உகந்த காலமனைத்தும்" என பதிலளித்தார்கள்.

இமாம் ஸன்ஃப்யான் இப்னு ஈயைனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அளித்த பதில் மிகவும் அற்புதமானது. அவர்களிடம் கல்வியைத் தேடுவது யாருக்கு மிக அவசியம்? என்று கேட்டபோது இமாமவர்கள் ""மக்களில் மிக அறிந்தவர்களுக்கு மிக அவசியம்" என்று கூறினார்கள். ஏன்? (அறிஞர் கல்வியைத் தேடியே ஏகவேண்டும்) என்று கேட்டபோது இமாமவர்கள் ""அறிஞனிடம் தவறு எற்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது" என்று கூறினார்கள்.
இமாம் ஃபக்ருத்தீன் ராஜி ரஹ்மதுல்லாஹி அலைஹி பிரபல குர்ஆன் விரிவுரையாளர் ஆவார்கள். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்கள். தர்க்கவாதம், தத்துவம் போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அக்கால அறிஞர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்து ஹிஜ்ரி 606ல் மரணமடைந் தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய பிரபலத்தை அளித்திருந்தான். அவர்கள் செல்லும் ஊர்கள், நுழையும் நகரங்கள் அனைத்திலும் அறிஞர்கள் தங்களது கல்வித் தாகத்தைத் தணித்துக்கொள்ள அவர்களை நோக்கி வந்தார்கள். இமாமவர்கள் ஒரு சமயம் "மர்வ' என்னும் நகருக்கு வந்தபோது அறிஞர்களும் மாணவர்களும் திரளாக வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதினர்.

அங்கு வந்திருந்த மாணவர்கள் கூட்டத்தில், பரம்பரை பற்றிய கல்வியை நன்கறிந்த ஒரு மாணவரும் இருந்தார். அவர் இருபது வயதைத் தாண்டாதவர். இமாமவர்கள் அக்கலையை திறம்பட அறியாதவர்களாக இருந்ததால் அம்மாணவரிடமிருந்து அதை கற்றுக்கொள்ள விரும்பி னார்கள். எவ்விதத் தயக்கமுமின்றி அம்மாணவரிடம் தனக்கு கற்றுத் தருமாறு கோரினார்கள். அவரை ஆசிரியரின் ஸ்தானத்தில் அமர்த்தி அவருக்கு முன் மாணவராக அமர்ந்தார்கள். அக்காலத்தில் சிறந்த இமாமாக இருந்தும் அந்நிகழ்ச்சி அவர்களது அந்தஸ்தை எவ்வகையிலும் குறைத்துவிடவில்லை. மாறாக, இமாமவர்களின் பணிவையும் மாண்பையும் சுட்டிக்காட்டும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது.
இந்த அறிஞர்களின் இதயங்கள் கல்வியை எந்தளவு நேசித்திருக்கின்றன! கல்வி அவர்களது பார்வையில் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள்! இம்மகத்தான முன்னோர்களைப் பின்பற்றுவது பின்னுள்ளோருக்கு எவ்வளவு அவசியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.






















No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator